எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள்
என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!!!!!!!!!!!!
எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லும் அந்த மக்களின் நற்செயல்களில் ஒன்றாக ”ஓதிப் பார்க்க மாட்டார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள். இதில் நாம் அன்றாடம் ஓதும் குல்ஹுவல்லாஹு அஹது, ஃபலக், நாஸ் மற்றும் கண் திருஷ்டி ஏற்பட்டால் ஓதிப் பார்த்தல் போன்ற நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஓதிப் பார்த்தலும் அடங்குமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மிஃராஜின் போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், “இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?” என்று கேட்டேன். அப்போது, “அல்ல, இது மூஸாவும் அவருடைய சமுதாயமும்” என்று சொல்லப்பட்டது.
அப்போது “அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பின்னர் என்னிடம், “அடிவானங்களில் இங்கும் பாருங்கள்” என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை கண்டேன். “இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இதில் அடங்குவர்” என்று சொல்லப்பட்டது.
(அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்து விட்டார்கள். மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ”நாம் தான் அவர்கள். நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனது தூதரைப் பின்பற்றினோம். அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்” என்று சொன்னார்கள்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே அவர்கள் புறப்பட்டு வந்து, “அவர்கள் யாரெனில் அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள். பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள். (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே, அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, “அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டு விட்டார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் – இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் – புகாரி 5705
விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர், ஓதிப் பார்க்க மாட்டார்கள் என்று பொதுவாகவே கூறப்படுவதால் இதில் எல்லா ஓதிப் பார்த்தலும் அடங்கும். நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளாக இருந்தாலும் இதில் விதிவிலக்கல்ல. அதிலும் நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயம் பல்லாயிரம் கோடி மக்களைக் கொண்டது. அவ்வளவு பேரில் வெறும் எழுபதாயிரம் பேர் தான் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள் என்று கூறப்படுவதால் இது மிக உயர்ந்த தகுதி என்பதை அறியலாம்.
அப்படியானால் ஓதிப் பார்த்தலை ஏன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தர வேண்டும்? இந்த இரண்டும் முரண்பாடாக உள்ளதே என்ற சந்தேகம் ஏற்படலாம்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளைக் கொண்டு ஓதிப் பார்த்தல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. இவ்வாறு ஓதிப் பார்த்ததற்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். அனுமதி என்பதன் பொருள் இது தான். ஆனால் அதே சமயம் அதைச் செய்யாமல் இருந்தால் கிடைக்கும் உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
ஓதிப் பார்க்க விரும்புவோர் எப்போது எதை ஓதிப் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தருவதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொறுப்பாக உள்ளதால் ஓதிப் பார்த்துள்ளனர். அதே நேரத்தில் ஓதிப் பார்ப்பதைத் தவிர்ப்பது மிகவும் உயர்ந்தது என்பதையும் விளக்கியுள்ளார்கள். எனவே இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.
கருத்துரையிடுக