இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!
முஸ்லிம்கள் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விடுகின்றான். அருளாளனின் அடிமைகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் அவர்களை எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான். மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத் தம் சிந்தையில் ஆழப் பதிக்கத் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள். தங்களுக்கிடையில் வெறுப்புகளையும்காழ்ப்புணர்வுகளையும் வளர்திடுவது அறியாமை காலத்துப் பண்பாடுகளாகும். இவையெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களின் கொடிய குணங்களாகும்.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்”என்னுடைய மரணத்திற்குப் பின் நிராகரித்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டு விடாதீர்கள். இன்னும் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்”. நிராகரித்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளது என்னவெனில் அவர்கள் (நிராகரிப்பவர்கள்) தங்களுக்குள் சண்டையிட்டு, பலவேறு கூட்டங்களாகப் பிரிந்து இரத்தம் சிந்தும் போர்களைத் தங்களது வாழ்கை நெறியாகக் கொண்டவர்கள் என்பதாகும்.
மனிதனின் சிந்தனையின் இலக்கு என்னவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகுமதியும் அமைகின்றது. உண்மை இவ்வாறிருக்க, மனிதன் ஏன் குறுகலாகவும் கோணலாகவும் தன்னுடைய சிந்தனையை ஓட்டிட வேண்டும்? இறைவன் விசாலமான நேர்வழியை காட்டித் தந்திருக்கும்போது மனிதன் ஏன் தன்னுடைய சிந்தனையை முடமாக்கி வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு சண்டையிட்டு மடிய வேண்டும்?
மனிதர்கள் பிரிந்து கிடக்கின்ற, பிளவுபட்டுக் கிடக்கின்ற சூழ்நிலைகளை நாம் ஆழ்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். உலக இலாப-நாட்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும். பலமும் வளமும் ஒற்றுமையில்தான் இருக்கிறது.
பலம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது. ஏற்கனவே பலவீனம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடு தலைதூக்கிவிடுமேயானால் அந்தச் சமுதாய அமைப்பு அழிந்தே போகும். முஸ்லிம்கள் அன்று பத்ர் என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் வெற்றி பெற்றபோது இறைவன் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் பலனையும் ஒருங்கே புகட்டினான். இதன் பிறகு இறைவன் ஒற்றுமையும் ஒருமுகப்பட்ட செயலுமே வெற்றியை பெற்றுத் தரும் என விளக்கம் தந்தான்.
“அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).
பின்னர் உஹதுப் போரில் முஸ்லிம்கள் ஸ்தம்பித்து நின்றார்கள்! ஏனெனில், அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டார்கள். அவர்கள் இந்தக் குற்றத்தை செய்ததால்தான் அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இன்று எந்தக் கொள்கை பலமும் இல்லாதவர்களும் முஸ்லிம்களை வெற்றி கண்டுவிடுகிறார்கள் என்றால் முஸ்லிம்கள் ஒற்றுமை எனும் கயிற்றை விட்டு விட்டதுதான் காரணம்.முஸ்லிம்களின் எண்ணமும் இலக்கும் எங்கெங்கோ தட்டுத் தடுமாறி போய்கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும்.அல்லாஹ்வின் அருளும் ஆசியும் முஸ்லிம்கள் ஜமாத் எனும் கூட்டமைப்பில் இருக்கும் போதே கிடைக்கின்றது. அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றிடும் போது முஸ்லிம்கள் அழிவுக்கு ஆளாகின்றனர்.
முஸ்லிம்களின் எதிரிகள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைத்திட வேண்டும் என்பதைத்தான். அதற்காக அவர்கள் முஸ்லிம்களுக்கிடையே இருந்து ஒருவரைத் தங்களுடைய கைப்பாவையாக ஆக்கிக் கொள்கின்றனர். அல்லது தங்களது கையாள் ஒருவரை முஸ்லிம்களுக்கிடையில் திணித்து விடுகின்றனர். சமுதாய ஒற்றுமையைக் காப்பதற்காக இத்தகைய சமூக விரோதிகளை அப்புறப்படுத்துவதில் தவறில்லை.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “பலவேறு விதமான கூட்டங்கள் தோன்றும்.இந்த மக்கள் தம் விவகாரங்களில் ஒற்றுமையாக இருந்திடும்போது, அவர்களிடையேகுழப்பத்தை உருவாக்க முயலுபவனை வாளைக்கொண்டு முடித்து விட வேண்டும்; அவர் யாராக இருந்தாலும் சரியே!“ (முஸ்லிம்).
முஸ்லிம்களின் ஒற்றுமை என்ற சக்கரத்தில் தடைகளை உருவாக்க முயற்சி செய்யும் மனிதன் இறைவனின் கீழ்க்காணும் கட்டளையின்கீழ் வருகின்றான்: “நேரான வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, மூமின்கள் செல்லாத வழியில் செல்பவனை நாம் அவன் செல்லும் தவறான வழியிலே செல்லவிட்டு (பின்னர்) நரகத்தில் நுழையச் செய்வோம். அதுவே சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (அல் குர் ஆன்4 :115).
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “கீழ்ப்படிதலிருந்து விலகி ஓடிவிட்டவன்(உம்மத்) வட்டத்திலிருந்து பிரிந்து விட்டான். அந்நிலையிலேயே இறந்து விடுவானேயானால் திண்ணமாக அவன் இஸ்லாமல்லாத ஒரு நிலையிலேயே இறந்தவன் போலாவான்” (புஹாரி).
இஸ்லாமியச் சமுதாய அமைப்பில் பதவி, பொறுப்புகளை ஆசைப்பட்டு கேட்பவருக்கு தரப்படுவதில்லை. ஏனெனில் இந்த ஆசை அவர்களை நியாய நிலையிலிருந்து தடம் புரளச் செய்யும் வாய்ப்புகள் ஏராளம். வசதி இருப்பவர்கள் உம்மத் என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு நன்மையைச் செய்திட வேண்டும். இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள்,“இறைவனின் பெயரால்! ஒரு பதவியை, அதைக் கேட்பவரிடமோ அதற்காக ஆசைப் படுபவர்களிடமோ நம்மால் ஒப்படைக்க முடியாது” எனச் சொன்னார்கள். (புஹாரி).
இதில் வெட்கி, நாணித் தலை குனியத் தக்க விஷயம் என்னவெனில், சில தனி நபர்களும் சில குடும்பத்தினரும் வெட்கமின்றி அற்பப் பதவிகளை நாடி ஓடி, இஸ்லாத்தின் உன்னதமான வழிகாட்டுதலை உடைத்தெறிந்து கொண்டே இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் இது போன்ற அத்துமீறல்களை எங்குக் கண்டாலும் அதை எதிர்த்து கிளம்பிட வேண்டும். இதனால் முஸ்லிம்களின் ஒற்றுமையை உறுதி செய்திட இயலும்.
கருத்துரையிடுக