...பெருமானாரின் பத்துக் கட்டளைகள்...

...பெருமானாரின் பத்துக் கட்டளைகள்...


1417 ஆண்டுகளுக்கு முன்….
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….
பெருமானார்(ஸல்) அவர்கள் 
அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள். 


1.
மக்களே...! நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். இறுதிநாள் வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது. இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


2.
மக்களே...! ஒருவர் குற்றம் செய்தால், அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பத்தினருக்கல்ல, அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.


3.
மக்களே..! அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமை காலத்தில் நிலவிய பழிக்கு பழியும், உயிர் போக்கும், மடமையும் இனி கூடாது.)


4.
மக்களே...! வட்டி வாங்குதல் இனி உங்களுக்கு தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டால் போதுமானது.) முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.


5..
மக்களே...! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர்க்கு உரிமையுண்டு. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கி வைக்கவோ, காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு, உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.



6.
மக்களே..! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தை சேர்ந்தவர்கள் நீங்கள். ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். 

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன்.

இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்க்கை நெறிகள்(ஸுன்னத்).



7.
மக்களே...! எனக்கு பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்கு பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்..! உங்களை படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜு கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காக சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்கு செல்வீர்கள்.



8.
மக்களே...! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்கு பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறி விடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்...! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய வைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலை வணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்து விடாதீர்கள்.)



9.
மக்களே...! அறிந்து கொள்ளுங்கள்...! உங்கள் இறைவன் ஒருவனே...! உங்கள் தந்தையும் ஒருவரே..! 

இறையச்சம் கொண்டோரை தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளை விட உயர்ந்தோருமல்ல.. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே.. அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர், குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்..) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.



10.
மக்களே...! இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா..? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா...? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது, இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்...? 

'
நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்து விட்டீர்கள்...! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள்...! எங்கள் வாழ்வுக்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.' 

அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.



இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி, 'அல்லாஹும்மஷ்ஹது..! அல்லாஹும்மஷ்ஹது...!! அல்லாஹும்மஷ்ஹது..!!! 

இறைவா..! நீயே இதற்கு சாட்சி..! இறைவா..! நீயே இதற்கு சாட்சி..!!!
இறைவா....! நீயே இதற்கு சாட்சி...! என்று மும்முறை முழங்கினார்கள்.

மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரை விட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். 

(
ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னுஜரீர், இப்னுஹிஷhம், ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்)

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ்

குறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும்.

எனவே, வெளிநாடு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றனரோ அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அவசியமாகிறது. திக்கு தெரியாத அயல்நாட்டில் போய் இறங்கியவுடன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிதான காரியமல்ல. அங்குள்ள டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் எளிதாக பெற்றுவிடலாமே என்றாலும், கூடுதல் கட்டணத்தை கொடுத்து தண்டம் அழும் சூழ்நிலை ஏற்படலாம்.

இதை தவிர்க்க நம் நாட்டிலேயே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுச்சென்றால் பாதிப் பிரச்னையை குறையும். எனவே, நம் நாட்டிலேய இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருத்தல் அவசியம். இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கு 4 ஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டுக்கான விசா பிரதி, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அன்றைய தினமே இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் வழங்கப்படும். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வாங்கிச்செல்லப்படும் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் ஓராண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பிறகும் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற முடியும்.
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger