பெற்றோர்களே! உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வையுங்கள்

பெற்றோர்களே! உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வையுங்கள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghidWiX97yD2Im_YbgeCSYQ6lcYhV6r2Hu8OcLh4-DWfK9gVmXEtMoVIPZCEklSaeE3kSnAz-OGFFcs6XUptm0Vnu0JCSb1n0R4G4M5U3foZ0q0ap7Z8MhhAz3iwjODnfgQCzMnj5EMVI/s72-c/ATT697407.jpg
பெற்றோர்களே! உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வையுங்கள்
நம் சமூகத்தில் எழுதப் படாத சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்கள் – “இது இப்படித் தான்! எல்லோரும் இப்படித் தான் செய்கிறார்கள், நாமும் அப்படித் தான் செய்திட வேண்டும்என்று மக்கள் அவைகளைக் கண்ணை மூடிக் கொண்டு காலா காலமாக பின் பற்றி வருகின்றனர். அவை சரி தானா, அவைகளை இன்னும் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கத் தான் வேண்டுமாஎன்று சிந்தித்துப் பார்த்திடக் கூட நேரமில்லை நம்மவர்களுக்கு. இப்படிப் பட்ட எழுதப் படாத சட்டங்களுக்கு, விதிகளுக்கு நம்மிடம் பஞ்சமே இல்லை!

நாம் சொல்ல வருவது மார்க்கம் சம்பந்தப் பட்ட ஷிர்க் மற்றும் பித்அத் போன்ற விஷயங்களைப் பற்றி அல்ல! அவை குறித்து நிறைய பேசப் பட்டு வருகின்றன. எழுதப் பட்டும் விவாதிக்கப் பட்டும் வருகின்றன.

இங்கே நாம் விவாதிக்க விருப்பது குடும்பம் சார்ந்த விஷயங்கள் குறித்துத் தான். இது குறித்து பல விஷயங்களை நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக அவைகளை அலசுவோம் இங்கே.

சான்றாக நமது இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் படிக்கிறான். படித்து முடிக்கிறான். வேலைக்குச் செல்கிறான். சம்பாதிக்கின்றான். சரி! அவன் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகின்றான்? “அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?” என்று கேட்டால் என்ன பதில் அவனிடமிருந்து வருகிறது?

அதெல்லாம் இப்ப எப்படி சார்? இன்னும் என் தங்கைகளுக்கே திருமணம் ஆகவில்லை; என் திருமணம் குறித்தெல்லாம் இப்ப எப்படி சார் நான் நினைத்துப் பார்க்க முடியும்?”

நாம் கேட்பது என்னவென்றால் அவன் மனம் உவந்து தான் இப்படி ஒரு முடிவை எடுக்கின்றானா? அல்லது உள்ளத்தில் திருமண ஆசைகளை வைத்துக் கொண்டு அதனை வெளியிட முடியாத சூழ்நிலைக் கைதியாகி விரக்தியுடன் இப்படிப் பேசுகின்றானா?

இங்கே ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார்.

பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான், அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில் மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேரியது. மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான்.

பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள் மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று!

பாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்த போது, “மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும்போல் தெரிகிறதேஎன்று பஷீரின் தாயார் மறுத்து விட்டதெல்லாம் வேறு விஷயம்.

ஏன் இந்த இரட்டை நிலை? தங்கைகள் அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?

பெற்றோர்களே, சண்டைக்கு வராதீர்கள்! வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன் காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?” – என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

அதே நேரத்தில் பெற்றோர் பேச்சை மீற முடியாமல் முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டு தனது திருமணம் குறித்து வீட்டில் பேசத் தயங்குகின்ற நமது இளைஞர்களின் மனப் புழுக்கத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டியது யார் பொறுப்பு?

பெற்றோர்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால் உங்கள் மகளை நீங்கள் எப்படி ஒரு குமரியாகப் பார்க்கிறீர்களோ அதுபோல் உங்கள் மகனும் ஒரு குமரன்தான்! உங்கள் மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி நீங்கள் விரும்புகிறீர்களோ அது போலவே உங்கள் மகனுக்கும் காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது தான் நியாயம்!

ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? “மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடும்!!பெற்றோர்களே! உங்கள் மகன்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைஇவ்வளவு தானா?

நாம் கேட்பது என்னவென்றால் தங்களின் மகள்களுடைய வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொடுப்பதில் காட்டுகின்ற அக்கரை போல் ஏன் உங்கள் மகன்களின் வாழ்க்கை விஷயத்திலும் அக்கரை காட்டக் கூடாது?

உங்கள் மகனுக்குத் திருமண ஆசை வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை யாரிடம் போய் சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத சூழ்நிலைகுடும்பத்தில் நிலவுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் தனது பாலியல் தூண்டல்களை (sexual urges) எப்படித் தணித்துக் கொள்வான்? அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு யார் பொறுப்பு?

எனவே பெற்றோர்களே! திருமண வயதில் உங்களுக்கு மகன்கள் இருந்தால், அவர்களிடம் நீங்களே மனம் திறந்து பேசுங்கள் அவர்களது திருமணம் குறித்து. அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் மன நிலையில் இருந்தால் உடனே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திடத் தயாராகுங்கள். அவர்களாகவே தங்கள் திருமணத்தை ஒத்திப் போட்டால் அது வேறு விஷயம்.

இது விஷயத்தில் நெருங்கிய உறவினர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நீங்கள் ஒரு இளைஞனுக்கு தாய் மாமன் அல்லது சித்தப்பா போன்ற உறவினராக இருக்கிறீர்களா? அந்த இளைஞன் சூழ்நிலை கருதி வாய் திறக்க முடியாமல் இருக்கக் கூடும். அந்த இளைஞனுக்கு நீங்கள் உதவிட முன் வர வேண்டும். உங்களுக்கு வசை மொழிகள் காத்திருக்கலாம். என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கொடுக்கத் துப்பில்லை, மகனுக்கு கல்யாணம் பேச வந்து விட்டீர்களா?”

இறுதியாக இளைஞர்களே! உங்களை நான் கேட்பது எல்லாம் இது தான்: உங்கள் திருமண வாழ்வு குறித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான்! நீங்கள் தான்! நீங்கள் தான்! எனவே உங்கள் எதிர்காலம் குறித்து நீங்கள் தெளிவாக சிந்தியுங்கள்.

குடும்பத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு புறம்; இன்னொரு புறம் நீங்கள் உங்களுக்கே செய்து கொள்ள வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இறைவன் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு நடு நிலைமையான போக்கே தவிர ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்து விடுவதை அல்ல!

தயவு செய்து உங்கள் வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளுக்கு உரிய முறையில் அவர்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்வதற்கு அனுமதியுங்கள். அவன் வாழப் போவது அந்த பெண்ணுடன்தான்.

உங்கள் விருப்பத்திற்காக நீங்கள் அவன் விரும்பிய பெண்ணை வெறுத்து நீங்கள் விரும்பும் பெண்ணைத்தான் முடிக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்.

பெற்றோர்களே! இன்றே உங்கள் மகனின் திருமணப் பேச்சை ஆரம்பியுங்கள்.


Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger