அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் "சகோதரரே! நண்பரே!'' எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? "இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?'' என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொல்லி விட்டு, "அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53:43); ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார் (35:18) (என்று கூறும்) குர்ஆனே உங்களுக்குப் போதும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1694)
உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது: "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்'' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இ(ப்னு உமர் அறிவிருத்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?'' என்று கேட்க) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.
"நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதை செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.
(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது
(27:80)
(நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது
(35:22)
அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1697)
உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, "பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப் பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் (ரஹ்)
நூல்: முஸ்லிம் (1693)
உமர் (ரலி) அவர்களும், அவர்களுடைய மகன் இப்னு உமர் அவர்களும் பிரபலமான நபித் தோழர்கள். குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆனிற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக "அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள்'' என்று இவர்கள் சொல்ல முன்வருவார்களா? இவர்கள் முன்வந்தாலும் ஒரு போதும் நமது உள்ளம் அதை ஏற்றுக் கொள்ளாது. இதே கோணத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து "சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, "அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக "அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்'' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு "இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது'' (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்)
நூல்: அஹ்மத் (24894)
ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் 2858, 5093, 5753, 5772 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் 4127, 4128 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது. யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. "வீடு, பெண், கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்; எனவே இம்மூன்றிலும் சகுனம் பார்க்கலாம்'' என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாதம்.
இந்த மூன்று செய்திகளிலும் ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதைக் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் தான் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று நாம் கூறும் அடிப்படையில் நபித் தோழர்களும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்காகத் தான் இந்தச் செய்திகளைக் கூறியுள்ளோம்.
—
கருத்துரையிடுக