ஒரு நண்பியின் கதை...!!!

ஒரு நண்பியின் கதை...!!!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkH_jRkTbP-66gO_z4sau1FyLvBRPWctiICQHI8cGiUeCdmTePqWEZ6VARZKAhf2UUukC4OvXlbTmroqniDCyU4PDYjAm-dALbt_bQ9ycHUf_QrgskDMW2HR9mrkvt2gSHfWlkWnYTbhCB/s72-c/images.jpg

 

நேரம் பகல் ஒரு மணி இருக்கும்.லஞ்ச் எடுத்துக் கொண்ட லட்சுமி கைகளைத் துடைத்துக் கொண்டே ரெஸ்ட் எடுப்பதற்காகத் தான் அறையினுள் சென்று கட்டிலில் மெதுவாகச் சாய்ந்தாள்
.
அவளது ரெஸ்டைக்  கலைத்து விடும் வகையில் வாசற் கேற்றடியில் தபாற்காரன் சங்கரதாசின் சைக்கிள் மணி ஓசை கேட்டு விரைந்து சென்ற லட்சுமியின் கரத்தில் சிரித்துக் கொண்டே சங்கரதாஸ் போஸ்மன் இன்று ஒரே ஒரு கடிதம் தான் வந்துள்ளது என்று சொன்ன படியே கடிதத்தைக் கொடுத்து விட்டு மறைந்தான்.
லட்சுமி கடிதத்தை வங்கிக் கொண்டு தன் மேசையருகில் வந்து வழமை போலவே அக் கடிதத்தை அவசர அவசரமாகப் பிரிந்தாள்
 
அறிமுகமில்லாத ஓர் புதிய கடிதத்தில்  முத்து முத்தான அழகிய எழுத்துக்கள்.ஆசையோடு படிக்கத் துவங்கினால்;அதில்.....
 
கவிதாவுள்ளம் கொண்ட ஆசிரியைக்
 
கலைவந்தனங்கள்.நான் கடந்த வாரம் வெளி வந்த தினகரன் வாரமலரின் மலையக மஞ்சரிப் பகுதியிலிருந்து உங்களது முகவரியை பெற்றுக் கொண்டேன்
 
தாங்கள் கலையுள்ளங்களின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மலையகத்திலிருந்து மாதா மாதம் மலையூற்று எனும் பெயரில் ஓர் கலை இலக்கியச் சஞ்சிகை வெளிவருவதாக அறிந்தேன்
 
உடனே அதைப் படிக்க வேண்டும் அதற்கு எழுத வேண்டும் என்று என்னுள்ளம் துடிக்கவே இம்மடலை நான் வரைகின்றேன்.
எனவே உங்களால் வெளியிடப்படும் மலையூற்று இதழின் ஓர் பிரதியை எனக்கு அனுப்புமாறு அன்போடு வேண்டுகிறேன்.அதற்கான அன்பளிப்பை உடன் அனுப்பி வைப்பேன்.உங்களது முயற்சி வெற்றி பெற எந்தன் உதவிகளும் ஒத்துழைப்புகளும் என்றுமே உண்டு.ஏனையவை பின் தொடரும்.-
நன்றி,
இவ்வண்ணம் இலக்கியதாகமுள்ள கலைவதனன்
கடிதத்தைப் படித்த லட்சுமி;கலைவதனின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் வகையில் உடனே மலையூற்று இதழை தபால் மூலம் அனுப்பி வைத்தாள்.
இதன் விளைவு அடிக்கடி நானா தங்கையாக மடல்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள்.நாட்கள் நகர நகர இவர்களின் சகோதர உறவு மாறி பாச எல்லை மீறி மிகவும் இறுக்கமான காதலாக மாறியது.
லட்சுமியின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக கலைவதனன் தன் குடும்ப நிலைமைகளை மனம் திறந்து எழுதுவான்
லட்சுமியும் அவ்வப்போது மன வேதனைகளுக்கு ஆறுதல் படுத்தி,'துன்ப நிலையும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி கிளியே
 
அன்புக் கழிவில்லை'எனும் பாரதியின் சிந்தனை ஊற்றை எடுத்துக் காட்டி பதில் வரைவாள்.
ஒரு நாள பேராதனையிலிருந்து மட்டக்களப்பிலுள்ள தன் அக்கா வீடு சென்ற லட்சுமி பாசிக் குடாவில் வைத்து முன் ஏற்பாட்டின் படி கலைவதனைச் சந்தித்தாள்
கறிவேப்பிலை கொத்து மாதிரி இளைஞன்,அலை அலையான சுருள் முடி,அரும்பு மீசை,ஆணழகன் போட்டியில் முதற்பரிசு கிடைக்கும் அளவுக்கு உடற்கட்டு
வங்கியில் காசாளர் பதவி.இத்தனை லட்சணங்களும் பொருந்திய அவன் வேதனையோடு மனம் திறந்து பேசினான்
அப்போது தான் அவன் சோகமே லட்சுமியை பரிதாபத்துக்குள்ளக்கியது.லட்சுமி நான் பிறந்த இடம் மலையகம் தான்.என் தாய் கொட்டும் மழையிலும்,மலையேறி இறங்கிய பாதங்கள் சோர்வுற்று சங்கொலி கேட்ட செவிகள் அடைத்து படுத்த படுக்கையாய் லயத்தில் தஞ்சமடைந்தார்
இதன் விளைவு என் எதிர் கால வாழ்வுக்காய் பல நூறு கற்பனைகளைச் சுமந்து விழித்திருந்த உத்தமியின் விழிகள் எனது ஐந்தாவது வயதில் நிரந்தரமாகவே மூட்டி விட்டது
இந்த நிலையில் பாசமில்லா தந்தையின் இரண்டாவது மனைவியின் அரவணைப்பில் எவ்வித உடன் பிறப்புக்களும் இன்றி தன்னந்தனிமையில் வாழ்ந்தேன்
பெண்கள் போலவே சகல வேலைகளையும் நானே செய்வேன். சமைத்து உண்டு,படித்து சிரமங்கள் மத்தியில் தொழிலை விடா முயற்சியினால் பெற்று இன்று தொழில் நிமிர்த்தம் இங்கு வசிக்கின்றேன்
தற்போது முப்பது வயதாகியும் கூட ஒரு மணப் பெண்ணைக் கட்டித் தர யாருமேயற்ற அநாதையாக இன்று வாழ்கிறேன
 
தன்   உள்ளத்தை லட்சுமியின் சந்திப்பின் போது வெளிப்படுத்திக் காட்டினான்  
என்னிதயத்தில் குடி அமர யாருக்குமே இடமேயில்லை.இடமளிக்கவும் மாட்டேன். கலைவதனன்
நிழலைத் தவிர இன்னும் ஓர் ஆடவனின் நிழலைக் கூட இந்த லட்சுமியில் பட விட மாட்டேன் என்னுயிருள்ள வரை தாய்க்குத் தாயாக உடன் பிறப்புக்கு உடன் பிறப்பாக மனைவிக்கு மனைவியாக இருந்து உங்கள் மனம் வேதனைப்படாமல் கண் கலங்காமல் உங்களுக்குத் துணையாய் நான் இருந்து வாழ்வேன்.என்று உறுதிகளை சத்திய வாக்கின் மூலம் கலைவதனுக்குக் கூறிவிட்டு அவளிடமிருந்து பிரிய மனம் இன்றி விடைபெற்றுக் கொண்டாள் லட்சுமி
.
இவர்களின் உறவு இப்படியே துளிர் விட்டு செழித்து வளரத் துவங்கியது.இதை அறிந்த லட்சுமியின் அக்கா தயா இருவரையும் எவ்விதத்திலாவது சரி பிரித்து விட்டு தன் கணவனின் தம்பிக்குத் தங்கையை கட்டிவைக்கத் திட்டம் தீட்டினாள்.
.
இல்லாத குறைகளையும் பொல்லாத பொய்களையும் கலைவதனன் மேல் சுமத்தி லட்சுமியை தந்தையிடம் சொல்லிக் கொடுத்தாள்.
இதன் விளைவு லட்சுமி மீது உயிரையே வைத்து இருந்தது
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுமடி' என வாழ்ந்த அப்பா லட்சுமியின் மீது கடலலை போல சீறிப் பாய்ந்து பேசினான்.
லட்சுமி எதுவுமே பேசாமல் பொறுமை ஒன்றே சிறந்த பொக்கிஷமெனக் கருதிக் கொண்டு மௌனத்தைத் தன் ஆடையாய் போர்த்திக் கொண்டாள்.
அடுத்த நாள் லட்சுமியின் அப்பா சண்முகப்பிள்ளை மனைவியை அழைத்து பெருமாள்;பின்னேரம் லட்சுமியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க.எல்லாவற்றையும் கவனித்துக் கொள் என்று  சொன்னார்.
பெருமாளுக்கு கணவன் சண்முகத்தின் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறு எதுவுமே பதிலாகப் பேச தைரியம் ஏற்படவில்லை.கணவர் பேசிய பையனுடைய திருக்கல்யாணக் குணங்களைப் பற்றி அறிந்தும் கூடத் தன் மகளை கரம் பிடித்துக் கொடுப்பது  தற்கொலைக்குச் சமன்;என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
மாலை நேரம் குறிப்பிட்டபடி அவர்கள் பெண் பார்க்க வந்தார்கள்.
பெண்ணை எங்களுக்கு நன்றாகவே பிடிச்சுப் போச்சு இனி திரு மண ஏற்பாடுகளைத் துரித மாக்கி கொட்டும் மேளம் தாலி கட்ட வேண்டியது தான் என்று சொன்னார் மாப்பிள்ளையின் அப்பா.
மாப்பிள்ளையின் அம்மா நாங்க பெத்தவங்களோட கஷ்ட நஷ்டங்களை,துன்ப துயரங்களை நன்கு புரிந்தவங்க தான்.ஆனாலும் மற்றவங்க சீதனமா தந்தார்கள் என்று கேட்டா மதிப்பாக நாங்க சொல்ல வேண்டும் என்ன?
அப்போ எங்களை விட பெருமை உங்கள் மகளுக்குத்தானே உண்டு
பெரிய மரியாதையாக,கௌரவமாக உங்கள் பெண்ணை மதிப்பினம் என்றவாறே தன் காளையை கன்னி மரத்தில் கட்டி வைப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபாவை ஏல விற்பனைக்காக மதிப்பீடு செய்தான்.
எல்லாவற்றையும் அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்த பெண்ணின் பெற்றோர் சரி;என்று சொன்னவாறே காலம் முழுவதும் வாழப் போறது நம்ம மகள் தானே,முதலில் லட்சுமியின் விருப்பத்தை கேட்போம் என்றவாறு லட்சுமி;உனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கம்மா?என்று கேட்டார் சண்முகப்பிள்ளை.
ஆமாம் அப்பா நல்லாப் பிடிச்சிருக்கு என்றாள் லட்சுமி.சக்கரைப் பந்தலில் தேன் மாறி பொழிந்ததைப் போன்ற  இன்பமான மகிழ்ச்சியோடு சரி நாங்க போகிறோம்,இனி ஏனைய திருமண விடயங்களைக் கவனிப்போம் என சொல்லிக் கொண்டு இருப்பிடத்தை விட்டு எழுந்தார்கள்
லஷ்மி,அவர்களைப் பார்த்து ஒரு சிறிய விஷயம் தவறாக என்னை இடைபோட வேண்டாம் உங்களுடன் பேச எனக்கு சிறு ஆசை என்றாள்.....
மாப்பிள்ளை வீட்டார் ஆசையோடு என்ன என்று கேட்பதை போல் பாசமோடு பார்வையை லஷ்மியின் மீது படர விட்டார்கள்.
உங்களுடைய மகனின் குணத்திற்கும்,பண்பிற்கும் என்னைப் பெற்றவர்கள் தருகின்ற அன்பளிப்புக்குப் பேர் தான் வரதட்சனை என்றால்,ஒழுக்கம் கேட்டுப் போய் சூதாடி மற்றப் பெண்களோடு தொடர்பு வைத்து சீரழிஞ்சு போய் நட மாடும் ஒருவனைக் கட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டிய எனக்காக அவரைப் பெற்றவங்க என்ற ரீதியில் எனக்கு நீங்கள் தர வேண்டிய இன்னலுக்கு என்ன சொல்வது?
இவைகளை நீங்க மறைத்து மூடி நல்ல பசுமையானவர்கள் போல் தானே சம்பந்தம் பேசி தூய்மையான பெண்ணின் வாழ்விற்கு கலங்கத்தை ஏற்படுத்த வந்தீர்கள்?
என்ன தலையை குணிந்து எல்லாமே உண்மையென்று ஏற்றுக்கொள்வதற்காக இந்த மௌனராகத்தை இசைக்கின்றீர்களா?
சரி சரி அவரை நான் மணந்து திருத்தப் போகிறேன்.நல்லவராக மாற்றியமைக்கப் போகிறேன்.
ஆனால்,என் திருமண வாழ்விற்காக நீங்க இந்த மலைநாட்டுப் பெண்ணிடம் வாங்கப் போகின்ற வரதட்சனை பற்றி எதுவுமே வேண்டாம். நாம் எதிபார்க்கவில்லையென்று சொன்னால் சரி.வந்தவர்கள் உடனே எதுவுமே பதிலாகப் பேசாது திரும்பி விட்டார்கள்
லட்சுமி மனம் விரும்பியவனை மணமகனாய் பெரும் எதிர் பார்ப்புடன் ஏங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போது எண்ணங்களைச் சுமந்து பறந்து வந்த மடலொன்று லட்சுமியின் கரங்களை முத்தமிட்டது
மடலை ஆவலோடு உடைத்தாள்.என் அன்பு லட்சமி;நான் உங்களை அன்போடு நேசித்தேன்.மனமாற விரும்பினேன்.அதே போல் நீங்களும் என்னை நேசித்தீர்கள்.விரும்பினீர்கள்.ஆனால் இன்று எமது உறவுக்கு உங்கள் தந்தையார் எவ்வித ஆதரவும் தராமல் எதிர்ப்பாக இருப்பதாகவும் என் நண்பனை உங்களுக்குத் திருமணம் பேசித் தீர்மானம் எடுத்து விட்டதாகவும் இன்று அறிந்தேன்.
வேதனை மேல் வேதனையாக சோதனைகளை சுமக்க முடியாத மனநிலையில் நான் இன்று இரவு தமிழ் நாடு செல்கிறேன்.
.
நான் உங்களை உடலால் பிரிந்து அங்கு செல்கின்றேனே தவிர என் உள்ளம் உங்களைப் பிரிந்து அங்கு செல்லவில்லை.உங்கள் நினைவு நித்தமும் என்னிதயத்தரையில் நிழலாடிக் கொண்டேயிருக்கும
உங்கள் மனநிலை எனக்குத் தெரியும்.ப்ளிஸ் என்னை என் பிரிவை நினைத்து கவலைப் பட வேண்டாம்.என்றோ  ஒரு நாள் உயிர் இருந்தாள் என் பிறந்த மண்ணான மலயகத்திற்கே மீள வருவேன்.
அப்போ உங்களை நேரில் சந்திக்கின்றேன்.உங்களை நான் என்றுமே மறக்க மாட்டேன்.இந்த அஞ்சல் உங்கள் வசம் கிடைக்கும் போது தமிழ் நாட்டில் இருப்பேன்.உங்கள் நினைவுகளைச் சுமந்து தமிழ் நாட்டில் கண்ணீரோடு சங்கமிக்கிறேன்.நீங்கள் நல்லபடி வாழ மன நிறைவோடு வாழ்த்துகின்றேன்.
                                                                                                                                              
நன்றி.இவன் உங்கள்                                                                                                                    நினைவில் வாடும்
                                                                           
கலைவதணன்  .                     
 
மடலை படித்த லட்சுமியின் மனம் அனலிடப்பட்ட மெழுகு போல் உருவாகியது தன் உறவுக்குத் தடையாய் நின்றவர்களை நினைத்து நினைத்து வருந்தினாள்.அவளது சோகம் அவளை விட்டுத்தான் போகுமா..........? மலைப்பாறைகளில் இருந்து கீழ் நோக்கி வடிந்து ஓடி வரும் தண்ணீரோடு அவள் இதயத்திலிருந்து பொங்கி வரும் கண்ணீர் சோக பள்ளத்தினுள் சங்கமானது.
        

                                                   
இடுகையிட்டது kalaimahel hidaya risvi நேரம் 11:37 pm0 கருத்துரைகள்
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger