ரமளானை வரவேற்வோம்

ரமளானை வரவேற்வோம்

அளவிலா கருணையும், இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்..!


ரமளானை வரவேற்வோம்

அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான்:

'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப் பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.' (அத்தியாயம் 02 ஸுரத்துல் பகரா- 183வது வசனம்)
மேலும் ரமளான் மாதத்தில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வந்த அருள்மறை குர்ஆனை இறக்கியருளியதாக அல்லாஹ் கூறுகிறான்.

'..ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும். (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப்பெற்றது, ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும்நாட்களில் நோற்க வேண்டும், அல்;லாஹ்; உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்;லாஹ்;வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்;லாஹ்; இதன் மூலம் நாடுகிறான்)..' (அத்தியாயம் 02 ஸுரத்துல் பகரா- 185வது வசனம்)
இவ்வாறு அல்லாஹ் விதித்த கடமைகளில் நோன்பு ஒரு முக்கிய வணக்கவழிபாடாகும். இந்த வணக்கவழிபாட்டையும் அருள்நிறைந்த இந்த ரமளான் மாதத்தையும் எவ்வாறு பேண வேண்டும் என்பதை அருள்மறை குர்ஆன் காட்டும் விதத்திலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை வாயிலாகவும் காண்போம்.

-: நோன்பு நோற்கக் கடமைபட்டவர்கள் :-

முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட அருள்மறை வசனத்திலிருந்து அறியலாம். இருப்பினும் நோன்பினை தற்காலிமாக விடுவதற்கு சிலருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக விட்டுவிடுவதற்கும் சிலருக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர முஸ்லிமான ஆண், பெண் அனைவரும் ரமளான் மாத்தில் நோன்பு நோற்க வேண்டும். முதலில் நோன்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள் எவர் என்பதை தெரிந்து கொண்டால், நோன்பு விதியாக்கப்பட்டவர்கள் யார் என்பதை தெளிவாக n அறிந்து கொள்ளலாம்.

-: நோன்பு நோற்க விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள் :-

பிரயாணிகள்:

'..எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும்நாட்களில் நோற்க வேண்டும்..' (அத்தியாயம் 02 ஸுரத்துல் பகரா- 185வது வசனத்தின் ஒரு பகுதி)
ரமளான் மாதத்தில் பிரயணாம் மேற்கொள்பவர்கள் அந்த நாட்களில் நோன்பை விட்டுவிட்டு, பிரயாணம் முடிந்து ஊர் திரும்பிதும் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

பிரயாணிகளுக்கான சலுகைகள் எவருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை நாம் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். ரமளான் மாதத்தில் பிரயாணம் செல்வதாக முடிவு செய்து விட்டாலே அவர், பிரயாணிக்கான சலுகைகளைப் பெறுகிறார்.

'பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா (ரல்) அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புற்பப்டலானார்கள். பிறகு காலை உணவைக் கொணடு வரச் செய்து (உண்பதற்காக) 'அருகில் வாரும்' என்றார்கள். அப்போது நான் நீங்கள் ஊருக்குள்தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்கப் போகிறீரா? என்று திருப்பிக் கேட்டார்கள்' என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார். (ஆதார நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்)
மேற்கண்ட ஹதீஸிலிருந்து அபூபுஸ்ரா என்ற நபித்தோழர் கப்பலில் ஏறி கப்பலைச் செலுத்தி அந்த ஊரின் எல்லையைத் தாண்டும் முன் ஊருக்குள் வைத்தே உணவருந்தியுள்ளார். அதுததான் நபிவழி எனவும் கூறியுள்ளார். எனவே மேற்படி ஹதீஸின்படி பிரயாணத்திற்கு ஆயத்தமாகி விட்டாலே அவர் நோன்பைத் தற்காலிகமாக விடும் சலுகைக்கு உரியவராகிறார் என்பதை அறியலாம். நோன்பு வைத்துக்கொண்டு ஒருவர் பயணம் மேற்கொண்டதும், அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுடன் மக்களும் நோன்பு நோற்றிருந்தனர். குராவுல்கமீம் எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, நோன்பு மக்களுக்கச் சிரமமாக உள்ளது எனவும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அஸருக்குப்பின் தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வரச்செய்து அருந்தினார்கள். (இதைப் பின்பற்றி) சிலர் நோன்பை விட்டனர். சிலர் நோன்பைத் தொடர்ந்தனர். சிலர் நோன்பைத் தொடர்வது நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்தபோது 'அவர்கள் பாவிகள்' எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) ஆதார நூல்கள்: முஸ்லிம், நஸயீ, திர்மிதீ)
பிரயாணத்தில் நோற்ற நோன்பைத்தான் முறிக்கலாம். ஊரிலேயே நோற்ற நோன்பை முறிக்கக்கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறும் கருத்தை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

எவ்வாறெனில் குராவுல்கமீம் என்னும் இடம் மதீனாவுக்கு அருகில் உள்ள இடமாகும். அந்த இடத்தை அஸர் நேரத்தில் அடைந்தார்கள் என்றால் - மதீனாவில் இருக்கும்போதே (பயணமான பின்பு அல்ல) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதை அறியலாம். நோன்பை தொடர்ந்தவர்கள் பாவிகள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால், பிரயாணத்தில் நோன்பு நோற்பது பாவமான காரியம் என்று கருதக்கூடாது. நபியவர்கள் நோன்பை விட்டுவிடுமாறு தம் செயல்மூலம் விளக்கிய பிறகு, அவர்கள் (மக்களில் சிலர்) நோன்பைத் தொடர்ந்ததாலேயே அவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

'இதன் பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்' என்று அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்)
மக்கா வெற்றிக்குப் பின்னர் மேற்கொண்ட பிரயாயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் (ரலி) அவர்கள் குறிப்பிடுவதால் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும், நோன்பை விடுவது பிரயாணயத்திற்குரிய சலுகையே என்பதையும் அறியலாம்.

வெளியூரில் சிலநாட்கள் தங்கி இருப்பவர்களும் அந்த நாட்களில் நோன்பைத் தற்காலிகமாக விட்டுவிடலாம்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு மக்கா வெற்றியின்போது போருக்கு ஆயத்தமானார்கள். குதைத், உஸ்பான் ஆகிய இடங்களுக்கிடையே கதீத் என்னும் நீரோடையை அடைந்தபோது நோன்பை விட்டார்கள். அம்மாதம்(ரமளான்) முடியும்வரை நோன்பை விட்டுவிட்டார்கள். (அறிவிப்வர் இப்னு அப்பாஸ் (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

ரமளானில் பத்துநாட்கள் இருக்கும்போது மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. அதன்பிறகு மக்காவில் இருந்த பத்துநாட்களும் அவர்கள் நோன்பு நோற்காமல் இருந்துள்ளார்கள். இவ்வாறு பிரயாணத்தின் போது நோன்பை விட்டவர்கள் வேறு நாட்களில் விட்டுவிட்ட நோன்பை கடமைபட்டுள்ளார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். ( இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger