'9/11 - என்ன மாதிரியான மதம் இது?'

'9/11 - என்ன மாதிரியான மதம் இது?'
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqsQ3Fw6W3-YrK2ugfR2V1v-xZbwgfhXtCvZJIsqpRKDZpGCDeoRmp6MFUaa4wGhStVtAr3yh_RdlRjUhQVHIWgDSvSi4tCWdSarCzPI9rGhhy4wNh3I_Uqf_4xg6nCwo7VKWqsN80GmM/s72-c/Bismillah_2.JPG



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்..

                                                        "9/11 தாக்குதலின் போது, மனக்குழப்பத்தில் இருந்த பலரையும் போல, ஜோஹன்னாஹ் சகரிச் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், 'இம்மாதிரியான செயலை செய்ய இவர்களை ஊக்குவிக்கிறதென்றால் என்ன மாதிரியான மதம் இது?'

இந்த சகோதரி, இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை படித்திருக்கின்றார். இஸ்லாம் குறித்த தன்னுடைய எண்ணங்களை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு குர்ஆன் பிரதியை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தார். 

ஏழு வசனங்கள் கொண்ட  முதல் அத்தியாயம், அன்புடைய இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதை பற்றி இருந்தது. சில வாரங்களில் குர்ஆன் முழுவதையும் படித்துவிட்டார் சகரிச். 9/11 அரங்கேறி சுமார் பத்து வாரங்களுக்கு பிறகு, 'நான் இப்போது உணர ஆரம்பித்தேன்' என்று கூறும் இவர், 'நான் ஒரு முடிவை தற்போது எடுக்க வேண்டும்' 

இஸ்லாம் குறித்து மிகத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார் சகரிச். இசை பயிற்றுவித்து கொண்டிருந்த இவர், சில மாதங்களில், பாஸ்டனில் உள்ள இஸ்லாமிய கழகத்தில் ஷஹாதா(1)எனப்படும் இஸ்லாமிய உறுதிமொழியை கூறி முஸ்லிமாகிவிட்டார். 

சகரிச் நினைவு கூறுகின்றார், 'ஆச்சர்யமாக இருக்கின்றது. ஒரு நடுத்தர வயது பெண்மணி, யாரையும் சார்ந்து வாழாதவள், அப்போது அதிகம் விமர்சிக்கப்பட்ட மார்க்கத்தை நோக்கி திரும்பியிருக்கின்றேன்'. 

ஆம். தீவிரவாதத்தோடும், வன்முறையோடும் தொடர்புப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கத்தை நோக்கி, அதுவும் 9/11-க்கு பிறகு, அமெரிக்கர்கள் திரும்பியது ஆச்சர்யமான ஒன்றே. ஜோஹன்னாஹ் சகரிச் போல, ஒரு ஆர்வத்தால் இஸ்லாமை படிக்க ஆரம்பித்து பின்னர் அதனை தழுவியது ஒரு சிலரல்ல. அப்படியாக நிறைய பேர் இருக்கின்றனர். 

வல்லுனர்களின் தகவலின்படி, 9/11-க்கு பிறகு முஸ்லிமானவர்களில் பெண்களே பெரும்பான்மையினர்.  இனரீதியாக, ஹிஸ்பானிக்ஸ் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களே அதிகமாக இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

ஒவ்வொரு வருடமும், அமெரிக்காவில், எத்தனை பேர் இஸ்லாமை நோக்கி வருகின்றனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், சுமார் 20,000 பேர் வரை அது இருக்கலாம் என்று மதிப்பீடு செய்திருக்கின்றனர். 

சிலருடைய இஸ்லாமிய தழுவல்கள் தலைப்பு செய்தியாக மாறி விடுகின்றன.  தாலிபான்களால் சிறைவைக்கப்பட்டு வெளியான பின்னர் இஸ்லாத்தை தழுவிய சகோதரி யுவான் ரிட்லி, பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் உறவினரான சகோதரி லாரன் பூத், சென்ற வருடம் இஸ்லாத்தை தழுவிய rap இசை பாடகரான சகோதரர் லூன் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். 

தென் கரோலினாவை சேர்ந்த ஏஞ்சலா கொலின்ஸ், எகிப்து முதல் சிரியா வரை பல நாடுகளுக்கு பயணப்பட்டவர். அந்த நாடுகளில் உள்ள மக்களின் அன்பாலும், பெருந்தன்மையாலும் கவரப்பட்டவர். 9/11-க்கு பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை நிலவிய போது, அதனை எதிர்க்கொள்ள முடிவு செய்தார்.

'என் நாடு இவர்களை தீவிரவாதிகளாகவும், பெண்களை அடிமைப்படுத்துபவர்களாகவும் தனிமைப்படுத்துவதை கண்டேன். இம்மாதிரியான உண்மைக்கு புறம்பான ஒன்றை நான் கற்பனை செய்ததில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். அப்போது, இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு இல்லாமல் இவர்களுக்காக வாதிட முடியாது என்பதை உணர்ந்தேன்'   

இஸ்லாமை தழுவிய மற்றவர்களை போலவே, திருத்துவம் உள்ளிட்ட சில கிருத்துவ நம்பிக்கைகள் தனக்கு என்றுமே சரியென பட்டதில்லை என்று கூறுகின்றார் ஏஞ்சலா

இஸ்லாமை படிக்க ஆரம்பித்த இவர், 9/11 நடந்து சில மாதங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். 'இறைவன் என்றால் யார் என்பது குறித்த இஸ்லாமின் விளக்கம் மிக அழகானது. என் மனதில் இருந்த எண்ணங்களுடன் அது ஒத்துப்போனது' என்று கூறுகின்றார் ஏஞ்சலா. 

சிகாகோவை சேர்ந்த சகோதரி கெல்லி காப்மேனும் இதே போன்றதொரு அனுபவத்தை கூறுகின்றார். ஒபாமாவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்த இவரை, இவரது உறவினர்கள் கண்டித்தனர். அதற்கு காரணம், ஒபாமாவை முஸ்லிம் என்று அவர்கள் தவறாக நினைத்துவிட்டனர். இது, இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள சகோதரி கெல்லியை தூண்டியது. 

சுமார் ஒரு வருட ஆய்வுக்கு பிறகு, எந்த விதமான தவறையும் இஸ்லாத்தில் அவர் காணவில்லை. அமைதிக்கு எதிராக இஸ்லாம் இருக்கின்றது என்று ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேச, அதனை நேருக்கு நேராக எதிர்க்கொண்டார் கெல்லி. இந்த சமயத்தில் தான் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக கெல்லி ஏற்றுக்கொண்டார். 

இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை மெதுவாக, அதேநேரம் உறுதியாக உயர்ந்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள பள்ளிவாசல்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்கின்றன. தொழுகைகள், பிரார்த்தனைகள், அடிப்படை நம்பிக்கைகள், ஒழுக்கம் என்று இவை குறித்த வகுப்புகள் இங்கு புதியவர்களுக்காக நடத்தப்படுகின்றன. 

வெல்மிங்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தின் புதிய முஸ்லிம்களுக்கான வகுப்புகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள வக்கார் ஷரீப், தன்னுடைய பள்ளிவாசலில் ஒவ்வொரு மாதமும் 4-5 பேர் இஸ்லாத்தை தழுவுவதாக கூறுகின்றார். 

உற்சாகத்துடன் இருந்தாலும், தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்வினையை எண்ணி வருத்தப்படுகின்றனர் சில புதிய முஸ்லிம்கள். மன உளைச்சலுக்கும், தாக்குதலுக்கும் தாங்கள் ஆளாக்கப்படலாம் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். 

'இஸ்லாம் மீதான தவறான எண்ணம் சற்றே களையும் வரை, இதுப்போன்ற சூழ்நிலையை நாங்கள் எதிர்க்கொண்டுதான் ஆக வேண்டுமென்று நினைக்கின்றேன்' என்று கூறுகின்றார் கெல்லி. இவருடைய பெற்றோர்கள் தங்கள் மகளின் முடிவை ஏற்றுக்கொண்டாலும், கெல்லியின் மாமா தன் மகளை இவரை பார்க்கக்கூடாதென்று தடை விதித்துவிட்டார். 'எதற்காக இவர்கள் எங்களை பார்த்து அச்சப்பட வேண்டும்?'

த்ரிஷா ஸ்கோயர்ஸ் முஸ்லிமாகி இன்னும் ஒரு மாதம் கூட முடிவடையவில்லை.  தன்னுடைய முடிவை தன் நண்பர்கள் சிலரிடம் கூறிய த்ரிஷாவிற்கு கிடைத்ததோ கலவையான எதிர்வினைகளே.

வேலைக்கு போகும் போது ஹிஜாப்(2) அணிவதில்லை த்ரிஷா. தன் மேலாளர் இதுக்குறித்து என்ன சொல்லுவார் என்ற தெளிவின்மையே இதற்கு காரணம். 

எனினும், மற்ற புதிய முஸ்லிம்களோ, இதுப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. 

'என்னை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை' என்று கூறும் ஏஞ்சலினா, தன்னை போலவே இஸ்லாத்தை தழுவிய தன் கணவருடன் தற்போது பிரேசிலில் வசித்து வருகின்றார், 'இறைவனை நான் கண்டுக்கொண்டேன். அது எனக்கு போதுமானது'"   

சில மாதங்களுக்கு முன்பாக (24/08/2011) "Huffington Post" இணையத்தில் வெளியான கட்டுரை தான் நீங்கள் மேலே படித்தது. 

இஸ்லாம் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களுக்கான என்னுடைய வேண்டுகோள் மிக எளிமையானது. உங்களைப்போல நிறைய பேர் இங்கு உண்டு. அவர்களில் பலர் குர்ஆனை திறந்த மனதோடு படித்த பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டதும் உண்டு. சில நாட்களிலேயே முழுமையாக படித்து முடித்து விடக்கூடிய குர்ஆனை நீங்கள் ஏன் முன்முடிவின்றி படித்துப்பார்க்க முன்வரக்கூடாது? 

குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆன்லைனில் முழுமையாக படிக்க ஆர்வமுள்ளவர்கள் <<இங்கே>> சுட்டவும். அல்லது pdf வடிவில் பெற விரும்புபவர்கள் எனக்கு ஒரு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com).     

சமீபத்தில் நான் கண்ட காணொளிகளில் என்னை மிகவும் பாதித்த ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக்கொண்டு விடைபெறுகின்றேன். இந்த பனிரெண்டு வயது சிறுவனுக்கும், அவனை அற்புதமாக வளர்த்திருக்க கூடிய அவனது பெற்றோருக்கும் மிகச்சிறந்த நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்.

சகோதரர் முஹம்மது ஆஷிக் இன்று வெளியிட்டுள்ள அதிரடியான பதிவையும் பார்த்துவிடுங்கள்... <<போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு>>

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.  

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ஷஹாதா - இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் கூறப்படும் உறுதிமொழி.  
2ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் கைமணிகட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணியும் முறையை குறிப்பிடுகின்றது. 

குறிப்பு:
1. இந்த பதிவு வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல. அது போல, மொழிபெயர்க்க கடினமாக இருந்த சில வரிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனை அதன் மூல மொழியில் முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லின்க்கை சுட்டவும். 

Reference:
1. Conversion To Islam One Result Of Post-9/11 Curiosity - Huffington Post, dated 24th August 2011. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
எம்.ஜே.எம்-றிம்சி
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger