ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா

ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg01UboA_V5kqZcthlq0Mv6n0v-gsxnbmXB00_PsoWJ9JfYIWd5V8oyZZyftyoKFEYuWfrBZswwKTWi1XKTqvqqmBqm8JFQPrdVR5xRhh1xBa67dVWskVtzslCaQG6xU2vd2m3g8xHNWO4/s72-c/Bismillah_2.JPG



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக்  கூடிய சவால்கள் சொல்லிமாளாதது.

சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...
       
"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.

பிறகு, பல்கலைகழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.

நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை (Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன்.

பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.

இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்...
"வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்"  
நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.   


நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்...ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன். ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. 

எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித்தரவில்லை.

ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று".

(இப்படி சொன்ன அந்த சகோதரருக்கு, இஸ்லாமை பற்றிய தெளிவான அறிவை இறைவன் அளிப்பானாக...ஆமின்)   

"நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. 

அப்போது நான் மிகவும் பயந்துவிட்டேன்
  • என்னால் அரபியில் தொழ முடியாமலேயே  போய்விட்டால் என்ன செய்வது?
  • என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது? 

அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்துவிட்டேன்... 

ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன். 

ஏனென்றால், சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக்கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக்கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன், அப்படியே படிப்பேன்...இப்படியே தொடரும்... நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும். 

பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை.

பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன்.

என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்துவிடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும்..

அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் "நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல" என்று...

ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்.... இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார்.அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை.

என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார்.

ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்.

நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன்.

அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.

நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல் இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.

நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்......

அஸ்ஸலாமு அலைக்கும்.....

ஆயிஷா"


சுபானல்லாஹ்...

நிச்சயமாக இறைவன் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்...  

இறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்..

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


My Sincere thanks to:
1. Reading Islam website - readingislamdotcom

Reference:
1. I wondered why Muslims are so proud - by Sister.Aysha, readingislamdotcom


உங்கள் சகோதரன்,
எம்.ஜே.எம்.றிம்சி



Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger