கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்


கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.

கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
மணிச்சத்துக்களும், வைட்டமின்களும்
கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நிவர்த்தியாகும். கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள விட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கஷாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையைக் கஷாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல குணம் தெரியும்.
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger