கஅபாலா (பிணையாக்கல்)

கஅபாலா (பிணையாக்கல்)



2290. ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள்.
இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களைக் குறித்து ஜரீர், அஷ்அஸ் இருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'இஸ்லாத்தைவிட்டுச் சென்றவர்களை பாவமன்னிப்புக் கேட்கச் செய்யுங்கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள் என்று கூறினர். அவ்வாறே அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர். உறவினர்கள் அவர்களுக்குப் பிணை நின்றனர்.
பிணையாளி இறந்துவிட்டால் அவர்மீது பொறுப்பில்லை (அவரின் வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது) என்று ஹம்மாது கூறுகிறார்.
பிணையாளி இறந்துவிட்டாலும் அவரின் பொறுப்பு நீங்கவில்லை என்று ஹகம் கூறுகிறார்.
Volume :2 Book :39
2291. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!" என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!" என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!" என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!" என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!" என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!" என்று கூறினார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :39
2292. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்ஸாரி ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உறவினர்கள் அன்றி முஹாஜிர் அவருக்கு வாரிசாவார். நபி(ஸல்) அவர்கள் இருவருக்கிடையே ஏற்படுத்திய சகோதரத்துவமே இதற்குக் காரணம். 'மேலும், தாய் தந்தையரும் நெருங்கிய பந்துக்களும்விட்டுச் செல்கிற செல்வத்திலிருந்து (விகிதப்படி பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம்! அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களின் பங்கைக் கொடுத்து விடுங்கள்! நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளானக இருக்கிறான்!" (திருக்குர்ஆன் 04:33) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது இது மாற்றப்பட்டது. உடன்படிக்கை செய்தவர்களுக்கிடையே வாரிசுரிமை, போய், உதவி புரிதல், ஒத்தாசை செய்தல், அறிவுரை கூறுதல் ஆகியவை தாம் எஞ்சியுள்ளன! உடன்படிக்கை வெசய்தவருக்காக வஸிய்யத் (மரண சாசனத்தின் வாயிலாக சிறிது சொத்தை எழுதி வைப்பது) மட்டும் செய்யலாம்!
Volume :2 Book :39
2293. அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), (ஹிஜ்ரத் செய்து) எங்களிடம் வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்!"
Volume :2 Book :39
2294. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார்.
"இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!" என்று பதிலளித்தார்கள்.
Volume :2 Book :39
2295. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
Volume :2 Book :39
2296. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
"பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!" என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!" என்று அபூ பக்ர்(ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!" என்றேன். அபூ பக்ர்(ரலி) எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. 'இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!" என்று அபூ பக்ர்(ரலி) கூறினார்.
Volume :2 Book :39
2297. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல் ஃம்மாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார். இப்னு தம்னா, தம்முடன் அபூ பக்ர்(ரலி)அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், 'அபூ பக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகிற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?' என்று கேட்டார். எனவே, குறைஷியர் இப்னு தம்னாவின் அடைக்கலத்தை ஏற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தம்னாவிடம், 'தம் வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூ பக்ருக்கு நீர் கூறும்! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்!" என்றனர். இதை இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூ பக்ர்(ரலி) வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதீ பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற தம் வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளி வாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து, ஆச்சரியத்துடன்அவரை கவனிக்கலாயினர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. இப்னு தம்னாவை உடனே அழைத்து வரச் செய்து 'அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டில்தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித் திருந்தோம். அவர், அதை மீறித் தம் வீட்டில் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டிவிட்டார். பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவர் தம் இறைவனைத் தம் வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறிவிட்டால் நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்து விடும்படி அவரிடம் கேளும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்ததை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூ பக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் (தயாராக) இல்லை!" என்று அவர்கள் கூறினார்கள். உடனே இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர்! நீர் அதன்படி நடக்க வேண்டும்! இல்லையென்றால் என்னுடைய அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார்' என்று பிற்காலத்தில் அரபியர் (என்னைப் பற்றிப்) பேசக் கூடாது என்று விரும்புகிறேன்!' எனக் கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'உம்முடைய அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன்! அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன்!" என்று கூறினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். 'நீங்கள் (மக்காவைத்) துறந்து (அபயம் பெறச்) செல்லும் நாடு எனக்குக் காட்டப்பட்டது. அது மலைகளுக்கிடையேயுள்ளதும் பேரீச்ச மரங்கள் நிறைந்துமான உவர் நிலமாகும்! அந்த இரண்டு மலைகள்தான் (மதீனாவின்) இரண்டு கருங்கல் பூமிகளாகும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கிச் சிலர் மதீனாவுக்குத் திரும்பி வந்தனர். அபூ பக்ர்(ரலி) ஹிஜ்ரத் செய்யத் தயாரானபோது, அவர்களிடம் 'சற்றுப் பொறுப்பீராக! எனக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) 'என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்!" என்றார்கள். நபி(ஸல) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக அபூ பக்ர்(ரலி) தம் பயணத்தை நிறுத்தினார்கள். தம்மிடத்திலிருந்து இரண்டு ஒட்டகங்களுக்கும் 'சமுர்' எனும் மரத்திலிருந்த இலைகளை நான்கு மாதங்கள் தீனியாகப் போட்டார்கள்.
Volume :2 Book :39
2298. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்; அப்போது 'இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று கேட்பார்கள். 'கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் 'நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!" என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), 'இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!" என்று கூறினார்கள்.
Volume :2 Book :39
வகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)
2299. அலீ(ரலி) அறிவித்தார்.
அறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Volume :2 Book :40
2300. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!" எனக் கூறினார்கள்.
Volume :2 Book :40
2301. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
'மக்காவிலுள்ள என் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா இப்னு கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்' என்றும் 'மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்' என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) 'அப்துர் ரஹ்மான்' (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, 'ரஹ்மானை நான் அறியமாட்டேன். அறியாமைக் காலத்து உம்முடைய பெயரை எழுதும் என்று அவன் கூறினான். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, 'இதோ உமய்யா இப்னு கலப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்நிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தவன். (அதனால் ஓட இயலாவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், 'குப்புறப்படுப்பீராக!' என்று கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தம் வாளால் வெட்டினார்.
"அப்துர் ரஹ்மான்(ரலி) தம் பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்!" என்று அவரின் மகன் கூறுகிறார்.
Volume :2 Book :40
2302. & 2303. அபூ ஹுரைரா(ரலி) அபூ ஸயீத்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் 'ஜனீப்' என்னும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்), அவர்கள் 'கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே தரத்தில்தான் இருக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இரண்டு ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாவையும், மூன்று ஸாவு சாதரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாவுகளையும் நாங்கள் வாங்குவோம்!' எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்யாதீர்! சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளின் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!" என்றார்கள்.
நிறுத்தலளவையிலும் இது போன்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :40
2304. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். 'நபி(ஸல்) அவர்களிடமம் இதுபற்றி நான் கேட்கும் வரை சாப்பிடாதீர்கள்!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.
'நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்கும் வரை என்பதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்கும் வரை' என்று கூட கஅபு(ரலி) சொல்லியிருக்கலாம்!' என்று அறிவிப்பாளர் (சந்தேகத்துடன்) கூறுகிறார்.
"ஓர் அடிமைப் பெண் இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது!' என்று உபைதுல்லாஹ்(ரஹ்) கூறினார்.
Volume :2 Book :40
2305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திரும்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டிய வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திரும்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) 'அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்' என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது. அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள்' அதையே கொடுத்து விடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், 'எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத்தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அழகிய முறையில் திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்' என்றார்கள்.
Volume :2 Book :40
2306. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.
Volume :2 Book :40
2307. & 2308. மர்வான் இப்னி ஹகம்(ரலி) மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:
ஹவாஸின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அப்போதுநபி(ஸல்) அவர்கள், 'உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானது! கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன்! எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய முதல் பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்(த்துக் காத்)திருந்தார்கள். இரண்டில் ஒன்றைத்தான் நபி(ஸல்) அவர்கள் தமக்காகத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்!' எனக் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்து, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களின் கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) மனப்பூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறவர் இதைச் செய்யட்டும்! தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர். அல்லாஹ் நமக்குக் கொடுக்க விருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை. அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!) என்றார்கள். இதற்கு மக்கள், 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம்! என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்குச் சம்மதிக்காதவர் யார் என்று நாம்அறிய மாட்டோம்! எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும்! என்றார்கள். மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களில் பொறுப்புள்ளவர்கள் அவர்களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, (கைதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாக சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
Volume :2 Book :40
2309. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான் மந்தமாக நடக்கும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன். அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, 'யாரவர்?" என்று கேட்டார்கள். 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்!" என்று கேட்டார்கள். 'நான் மந்தமான ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்!' என்று கூறினேன். 'உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். 'அதை என்னிடம் கொடும்!' என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள். அப்போதிருந்து என்னுடைய ஒட்டகம் அனைவரையும் முந்திச் செல்ல ஆரம்பித்தது. 'இதை எனக்கு விலைக்குத் தாரும்! என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! இது உங்களுகுரியது' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இதை எனக்கு விலைக்குத் தாரும்! நான்கு தங்கக் காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன்! மதீனாவரை நீர் இதில் சவாரி செய்து வரலாம்! என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்) 'எங்கே போகிறீர்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் '(கணவனை இழந்த) ஒரு கைம்பெண்ணை நான் மணந்திருக்கிறேன்!' என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடன் விளையாடிக் களித்திட, அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே! என்று கேட்டார்கள். அதற்கு நான், 'என் தந்தை, பெண் மக்களைவிட்டுவிடு இறந்துவிட்டார்; எனவே, குடும்ப அனுபவமுள்ள, (கணவனை இழந்த) கைம்பெண்ணை மணக்க நாடினேன்!' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அது சரிதான்! என்றார்கள் . நாங்கள் மதீனாவுக்குச் சென்றதும் பிலால்(ரலி) அவர்களிடம், 'இவருக்குக் கொடுப்பீராக! கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பீராக!' என்று கூறினார்கள். பிலால்(ரலி) எனக்கு நான்கு தங்க நாணயங்களையும் அதிகமாக ஒரு கிராத்தையும் கொடுத்தார்கள்.
'நபி(ஸல்) அவர்கள் அதிகமாகத் தந்த (கீராத்தான)து என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது!' என்று ஜாபிர்(ரலி) கூறினார். அந்த ஒரு கீராத். ஜாபிர்(ரலி) அவர்களின் பணப்பையைவிட்டுப் பிரிந்தேயில்லை" என அதாவு(ரஹ்) கூறினார்.
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger