அதிகாரம் வழங்குதல்
வகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)
2299. அலீ(ரலி) அறிவித்தார்.
அறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Volume :2 Book :40
2300. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!" எனக் கூறினார்கள்.
Volume :2 Book :40
2301. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
'மக்காவிலுள்ள என் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா இப்னு கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்' என்றும் 'மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்' என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) 'அப்துர் ரஹ்மான்' (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, 'ரஹ்மானை நான் அறியமாட்டேன். அறியாமைக் காலத்து உம்முடைய பெயரை எழுதும் என்று அவன் கூறினான். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, 'இதோ உமய்யா இப்னு கலப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்நிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தவன். (அதனால் ஓட இயலாவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், 'குப்புறப்படுப்பீராக!' என்று கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தம் வாளால் வெட்டினார்.
"அப்துர் ரஹ்மான்(ரலி) தம் பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்!" என்று அவரின் மகன் கூறுகிறார்.
Volume :2 Book :40
2302. & 2303. அபூ ஹுரைரா(ரலி) அபூ ஸயீத்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் 'ஜனீப்' என்னும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்), அவர்கள் 'கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே தரத்தில்தான் இருக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இரண்டு ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாவையும், மூன்று ஸாவு சாதரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாவுகளையும் நாங்கள் வாங்குவோம்!' எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்யாதீர்! சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளின் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!" என்றார்கள்.
நிறுத்தலளவையிலும் இது போன்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :40
2304. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். 'நபி(ஸல்) அவர்களிடமம் இதுபற்றி நான் கேட்கும் வரை சாப்பிடாதீர்கள்!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.
'நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்கும் வரை என்பதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்கும் வரை' என்று கூட கஅபு(ரலி) சொல்லியிருக்கலாம்!' என்று அறிவிப்பாளர் (சந்தேகத்துடன்) கூறுகிறார்.
"ஓர் அடிமைப் பெண் இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது!' என்று உபைதுல்லாஹ்(ரஹ்) கூறினார்.
Volume :2 Book :40
2305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திரும்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டிய வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திரும்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) 'அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்' என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது. அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள்' அதையே கொடுத்து விடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், 'எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத்தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அழகிய முறையில் திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்' என்றார்கள்.
Volume :2 Book :40
2306. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.
Volume :2 Book :40
2307. & 2308. மர்வான் இப்னி ஹகம்(ரலி) மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:
ஹவாஸின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அப்போதுநபி(ஸல்) அவர்கள், 'உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானது! கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன்! எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய முதல் பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்(த்துக் காத்)திருந்தார்கள். இரண்டில் ஒன்றைத்தான் நபி(ஸல்) அவர்கள் தமக்காகத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்!' எனக் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்து, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களின் கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) மனப்பூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறவர் இதைச் செய்யட்டும்! தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர். அல்லாஹ் நமக்குக் கொடுக்க விருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை. அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!) என்றார்கள். இதற்கு மக்கள், 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம்! என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்குச் சம்மதிக்காதவர் யார் என்று நாம்அறிய மாட்டோம்! எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும்! என்றார்கள். மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களில் பொறுப்புள்ளவர்கள் அவர்களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, (கைதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாக சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
Volume :2 Book :40
2309. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான் மந்தமாக நடக்கும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன். அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, 'யாரவர்?" என்று கேட்டார்கள். 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்!" என்று கேட்டார்கள். 'நான் மந்தமான ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்!' என்று கூறினேன். 'உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். 'அதை என்னிடம் கொடும்!' என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள். அப்போதிருந்து என்னுடைய ஒட்டகம் அனைவரையும் முந்திச் செல்ல ஆரம்பித்தது. 'இதை எனக்கு விலைக்குத் தாரும்! என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! இது உங்களுகுரியது' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இதை எனக்கு விலைக்குத் தாரும்! நான்கு தங்கக் காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன்! மதீனாவரை நீர் இதில் சவாரி செய்து வரலாம்! என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்) 'எங்கே போகிறீர்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் '(கணவனை இழந்த) ஒரு கைம்பெண்ணை நான் மணந்திருக்கிறேன்!' என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடன் விளையாடிக் களித்திட, அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே! என்று கேட்டார்கள். அதற்கு நான், 'என் தந்தை, பெண் மக்களைவிட்டுவிடு இறந்துவிட்டார்; எனவே, குடும்ப அனுபவமுள்ள, (கணவனை இழந்த) கைம்பெண்ணை மணக்க நாடினேன்!' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அது சரிதான்! என்றார்கள் . நாங்கள் மதீனாவுக்குச் சென்றதும் பிலால்(ரலி) அவர்களிடம், 'இவருக்குக் கொடுப்பீராக! கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பீராக!' என்று கூறினார்கள். பிலால்(ரலி) எனக்கு நான்கு தங்க நாணயங்களையும் அதிகமாக ஒரு கிராத்தையும் கொடுத்தார்கள்.
'நபி(ஸல்) அவர்கள் அதிகமாகத் தந்த (கீராத்தான)து என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது!' என்று ஜாபிர்(ரலி) கூறினார். அந்த ஒரு கீராத். ஜாபிர்(ரலி) அவர்களின் பணப்பையைவிட்டுப் பிரிந்தேயில்லை" என அதாவு(ரஹ்) கூறினார்.
Volume :2 Book :40
2310. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னை உங்களுக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டேன்!' என்றார். அங்கிருந்த ஒருவர் 'இவரை எனக்கு மணம் முடித்துத் தாருங்கள்!' என்று கேட்டார். 'உம்மிடமிருக்கும் குர்ஆன் பற்றிய ஞானத்தின் காரணமாக உமக்கு இவரை மணமுடித்துத் தந்தோம்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :40
2311. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது" என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :40
2312. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) 'பர்னீ' எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் 'இது எங்கிருந்து கிடைத்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள்.
Volume :2 Book :40
2313. சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
உமர்(ரலி) (வக்ஃபு) செய்துவிட்டுச் சென்ற தர்மத்தைப் பற்றி அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறும்போது, 'இதன் பொறுப்பாளன் தமக்காகச் சுருட்டிக் கொள்ளும் எண்ணமின்றி, தாம் சாப்பிடுவதும் தம் தோழருக்குச் சாப்பிடக் கொடுப்பதும் தவறில்லை' என்றார்கள்.
உமர்(ரலி) (வக்ஃப்) செய்த தர்மத்திற்கு இப்னு உமர்(ரலி) பொறுப்பாளராக இருந்தார்கள். மக்காவில் அவர்கள் வழக்கமாக யாரிடம் தங்குவார்களோ அவர்களுக்கு அதிலிருந்து அன்பளிப்பு வழங்குவார்கள்.
Volume :2 Book :40
2314. & 2315. அபூ ஹுரைரா(ரலி) ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:
நபி(ஸல்) அவர்கள் உனைஸ்(ரலி) அவர்களிடம் 'இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்று!' என்று கூறினார்கள்.
Volume :2 Book :40
2316. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
"நுஐமான் அல்லது அவரின் மகன் மது அருந்திய நிலையில் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்! நாங்கள் செருப்புகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்."
Volume :2 Book :40
2317. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் பலியிடுவதற்காக அனுப்பி வைத்த ஒட்டகங்களுக்கு அடையாளமாகக் கழுத்தில் கட்டப்படும் மாலைகளை என் கைகளால் நான் பின்னினேன். நபி(ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தையுடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (நபி(ஸல்) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு ஹலாலாக்கிய எதுவும் அந்தப் பிராணிகள் அறுக்கப்படும் வரை (இஹ்ராம் அணிந்தவர் மீது ஹராமாகிவிடுவது போன்று) அவர்களின் மீது ஹராமாக்கவில்லை."
(ஒருவர் இஹ்ராம் அணியாமல் சொந்த ஊரிலிருந்து பலிப்பிராணியை அனுப்பினால் இஹ்ராம் அணிந்தவருக்குரிய சட்டங்கள் அவருக்குக் கிடையாது என்பது இதன் கருத்து.
Volume :2 Book :40
2318. அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) மதீனாவில் முஸ்லிம்களில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த 'பீருஹா' எனும் தோட்டம் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொத்துக்களில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள சுவையான தண்ணீரை அருந்தும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். 'உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து (இறைவழியில்) செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடையமுடியாது! என்ற (திருக்குர்ஆன் 03:92) திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! 'உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடைய முடியாது!' என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களில் 'பீருஹா' எனும் இந்தத் தோட்டமேயாகும்! இனிமேல், இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும்! இதன் நன்மையை அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன்! இறைத்தூதர் அவர்களே! நீங்கள் விரும்பும் விதத்தில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அழிந்து) போய்விடும் செல்வம்தானே! (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (நற்கூலி பெற்றுத் தரும் தரும காரியத்தில்தான் அது போகட்டுமே!) நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்; அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீர் (தர்மமாக) வழங்குவதையே விரும்புகிறேன்!' எனக் கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறே செய்கிறேன்!' எனக் கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கு போட்டுக் கொடுத்தார்கள்.
கருத்துரையிடுக